Saturday, September 10, 2011

மீண்ட சொர்க்கம்…....

கவிதைக் கரு : ஓருயிராய் வாழ்ந்திருந்த ஈருயிர்களின் காதல்... தன் காதலன் விமானவிபத்தொன்றில் மரணித்து விட்டதாய் அறிவிக்கப்பட்டதை கேள்வியுற்று அனலில் விழுந்த வண்ணத்துப் பூச்சியாய் துயரத்தின் ஆழத்தில் துடிக்கிறாள் காதலி. மறுநாள் தரைஇறங்கிய தேவனாய் ..... உயிரோவியமாய்..... காதலன் அவள்முன் வந்து நிற்கிறான். நெருப்புப் பொறி ஒன்றை கண்களுக்குள் வீசி தான் காண்பது கனவில்லை என்பதை உறுதி செய்து உணர்ச்சிகளின் உச்சத்தில் துடிக்கிறாள் … மகிழ்ச்சிப் பிராவகமாய் வெடிக்கிறாள் ….

என்
உயிர்நெருப்பின் கடைசிப் பொறி
உதிர்ந்துவிடக் காத்திருக்கும் வேளையில்
நீ
உன் உயிர்மூச்சு கொண்டு
ஊதி ஊதி அதை அக்கினிச் சோலைஆக்கினாயே….

அந்தரத்தில்
சிறகொடிந்து விழுந்து கொண்டிருந்த
இந்த சிட்டுக்குருவியை
உன் சிறகுகளால் ஏந்தி
இறகுகளால் சிறகு
தைத்துக் கொடுத்தாயே.....

பட்டுப் போகவிருந்த
இந்த பட்டாம்பூச்சியைத்
தொட்டுத் தழுவி
பட்டுச்சிறகு மலர்வித்தாயே.....

என்
ஊயிர்த்துளிகள்
உருண்டோடி ஆவியாகும்முன்
என் உயிரை
உறைய வைத்து உன்னில்
கரைய வைத்தாயே.......

ஐம்புலன் அவிந்திடும்
வேளையிலே உயிர்புதுப்பித்து
ஐம்புலன் அவிழ்த்தாயே.....

என்
கனவுகள் கருகியதாய்
நான் நினைத்து
மருகிய வேளையில்
கைகால் முளைத்த கனவாய்
என் கண்முன் வந்தாயே.........

உடலின் மயிர்க்கால்களெல்லாம்
முட்கள் முளைத்து உறுத்துவதாய் எண்ணியிருந்தேன்
முளைத்திருப்பது இலட்சம்
அனிச்சமலர்கள் என்றுணர்ந்து உயிர்த்தேன்…

திராவக நதியில்
ஒரு மீனாய் துடித்திருந்தேன்
திரவியமே உனைக்கண்டு
உயிர்த்தெழுந்தேன்….

என் உயிர் கிழிந்து
இறப்பு நிகழ்ந்ததாய்
நினைத்திருந்தேன்…
சிப்பி கிழிந்து
பிறப்பு நிகழ்ந்தது
முத்துக்கென்றாய்
மகிழ்ந்தேன்…

என் முகவரி
துலைத்து விட்டதாய்
வருந்தியிருந்தேன்
தொலைத்தது முகவரியை
அல்ல முகாரியை
என்றாய்
பரவசமானேன்.
 
இப்படி ஒரு
நரக அனுபவத்திற்குப்பின்
சொர்க்க அனுபவம்
கிடைக்குமென்றால்
வாழ்நாள் முழுக்க
நரகத்தில் உழன்று விட்டு
கடைசி நாள் மட்டும்
உன்னோடு உயிர் கலப்பேன்..





















No comments:

Post a Comment