தான் உருகி உருகி நேசித்தவள் தன்னை உதறி எறிந்து போனதை எண்ணி எண்ணிக் குமைகிறான் அவன். உள்ளம் உருகி, உயிர் உருகி, அன்பில் கரைந்து, மனம் நெகிழ்ந்து கிடந்த நாட்கள்…. , அந்த அனிச்சப்பூ நினைவுகள் அலை அலையாய் அவன் இதயத்தில் ஒயாமல் அறைந்து கொண்டே இருக்கிறது…. பொங்கிவரும் கண்ணீரைத்துளிகளை எல்லாம் கவிதைத்துளிகளாக்கி காகிதத்தில் தவழவிடுகிறான்….
அன்று
பொக்கிசமாய் உன்னை நெஞ்சில் வெச்சேன்..
இன்று
கசங்கிப்போன கனவுகளை கண்ணில் வெச்சேன்..
நுரை நுரையாப் பொங்குதடி உன் நினைப்பூ…
பிறை பிறையாய் தேயுதடி என் உயிர்ப்பூ…
மின்மினி ஞாபகங்கள் நெஞ்சுக்குள் கோலமிடும்…
ஓர் ஏழை சீவன் மட்டும் உள்ளுக்குள் ஓலமிடும்…
பெளர்ணமி ராத்திரிகள் உன் அழகைச் சித்தரிக்கும்…
மெளனமாய் என்னுயிரைக் கத்தரிக்கும்…
உசுருமட்டும் கொசுரா இருக்குதடி…
என் உள் நெஞ்சு நெருப்பா கொதிக்குதடி…
அன்பொழுகும் உன்
பனிப்பார்வை நினைவுகளால்
அனல் பொங்குதடி…
உயிர் கொஞ்சம் உருகி
விழிவழி வழியுதடி…
உடைந்து போன என்
கனவின் துண்டுகள்
கருவிழிக்குள் உறுத்துதடி…
நாடி நரம்பிலெல்லாம்
அமிலம் சுரக்குதடி…
வெட்டவெளியில் ஒற்றைச் சீவன்
வீறிட்டு அழுகுதடி….
கடல் விட்டுக்குதித்த மீனொன்று
கண்ணீர்த் தொட்டிக்குள் வாழுதடி..
மூச்சு விடும் இடைவெளிகளில்
உன் பெயரை ஊரறியாமல்
உச்சரிதுப் பார்க்குதடி…
ஆறாத ரணமொன்று
ஆறாக ஓடுதடி…
பெளர்ணமியில்
பனி இரவில்
தென்றலின் கரங்கள்
உன் நினைவுகளை அள்ளி
என் முகத்தில் வீசுதடி…
மயிர்க்கால்களெல்லாம்
தீப்பந்தமானதடி..
உயிர்ப்பூவின் இதழ்களெல்லாம்
ஒவ்வொன்றாய்க் கருகுதடி..
கனவெல்லாம் கண்ணீராச்சு
கண்ணீரெல்லாம் கவிதையாச்சு
கனவும் கலைஞ்சுருச்சு..
கண்ணீரும் தீர்ந்துருச்சு…
கவிதை மட்டும் தீரலியே..
உன் அன்பின் தழும்புகள்
ஆரலியே…
வெட்டி வெட்டி போட்டாலும்
முட்டி முட்டி வளருதடி உன் நினைப்பு
கட்டி கட்டி போட்டாலும்..
கண்ணுக்குள்ள ஆடுதடி உன் சிரிப்பு
நிலவே ஏன் என்னை சூரியனில் தவிக்கவிட்டாய்?
பகலெ ஏன் எனக்குக் காரிருளைப் பரிசளித்தாய்?
இப்போதும் நான்
சிரிக்கிறேன்… இதழ்கள் பிரிவதில்லை
அழுகிறேன்.. கண்ணில் கண்ணீரில்லை
நித்தமும் சுவாசிக்கிறேன்
ஆனால் நான்
சத்தியமாய் உயிரோடில்லை…
என்றேனும் ஒருநாள்
உன்னை மறந்திருப்பேன்…
அன்று
காலத்தின் பற்கள் என்
உயிரைக் குதறி இருக்கும்
அல்லது
என் மூளை சிதறிஇருக்கும்.
arumai!!!!!!!!!!!
ReplyDeletearumai!!!!!!!!!!!!!!