Saturday, April 9, 2011

துரோகம் செறித்தல் - கவிதை .

 பின்புலம்:  முறையாய்ப் பெண் கேட்டு வந்து, 5 மாதங்களாய் உருகி உருகிக் காதலிப்பதாய் நடித்து விட்டு, அவள் உள்ளத்தில் ஆயிரம் கற்கண்டுக் கனவுகளை விதைத்து விட்டு, கடைசியில் அவன் தந்தை தாய்க்கு இவர்கள் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இவனுக்கும் விருப்பம் இல்லாமல் போய்விட்டதெனக் கூறி அவள் இதயத்தை கசக்கியெறிந்து விட்டு கசங்காத சட்டையுடன் சென்று விடுகிறான் ஒரு காதலன்...

விக்கித்து நிற்கிறாள் காதலி…..     திசைகள் தப்பி நிற்கிறாள் காதலி…

அவள் சாமான்யப் பெண்ணல்ல…அறிவுச்சுரங்கம்… ஆனாலும் அடக்கத்தின் அரங்கம்… ஆட்சிப்பணித் தேர்வு (IAS) எழுதும் மாட்சிப்பணியில் தன்னைக் கரைத்து கொண்டிருப்பவள்… அடிப்படையில் அவள் ஒரு கிராமத்துப் பெண்ணானாலும் டெல்லியில் உட்கார்ந்து உலகின் நீள அகலங்களை அளந்து பார்த்துவிட்டு வந்தவள். யதார்த்தவாதி. ஆனால் அவளும் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை எண்ணிக் குமைகிறாள். .காதலித்த நாட்களை கண்மூடி அசை போடுகிறாள்….. தன் அனுபவங்களை மறு பரிசீலனை செய்கிறாள். காதலன் எப்படி எல்லாம் தன் பல அயோக்கியத்தனங்களை மறைத்தான் என்பதும்… எப்படி எல்லாம் பேசி, நடித்து தன் உள்ளம் வளைத்தான் என்பதையும் சிந்தித்து அறிகிறாள் … தெளிகிறாள்…. துரோகம் செறிக்கிறாள்.

அவளாக நானிருந்து பார்த்தேன்…அவள் ஆத்திரத்தைக் கவி ஒன்றில் வார்த்தேன்…
(கொங்கு வட்டாரச்சொல் வழக்கில்):

               “  சாமியோ பூதமோ இயற்கையோ விதியோ
                 ஏதோ ஒரு பெருஞ்சக்தி
                 மயிரிழையில் என்னைக் காத்ததென
                 இப்பத்தான் புரிஞ்சிச்சு….  “

கண்ணாலம் ஆயிருந்தா…
பஞ்சு பஞ்சா பிரிச்சிருப்பான்..
இந்தப் பாவி நெஞ்ச எரிச்சிருப்பான்…

அத்தானா ஆயிருந்தா..
என்னுசுரக் கூறுபோட்டு
அத்தாணிச் சந்தையில வித்திருப்பான்…

மாமான்னு ஆயிருந்தா…
கோமாவிலும் என்னைக்
கொன்னிருப்பான்…

அடக்கி ஒடுக்கி
என்னை அடிமையாக்கிக்
களிச்சிருப்பான்…
கண்டவ பின்னால போயி
இளிச்சிருப்பான்….

அவங்கப்பங்காரன் சொல்லிப்புட்டா
என்ன ஏலம் போட்டு வித்துருப்பான்…
சொத்தைஎல்லா புடுங்கிக்கிட்டு..
ஒத்தையில் விட்டிருப்பான்…

எங்கப்பன் ஆத்தாளோட
எங்குடும்பத்தின் நிம்மதிய
அணு அணுவாக் கொன்னிருப்பான்..

இப்பவாச்சும் விழிச்சுகிட்டேன்
குடும்பத்தோட பொழச்சுக்கிட்டேன்…

பாழாய்ப் போனவன் நெனப்பயெல்லாம்
குழிதோண்டி பொதச்சுபுட்டேன்…

பாரம் எல்லாம் எறக்கிப்புட்டேன்…
நான் போகவேண்டிய
தூரம் பத்தி நெனச்சுக்கிட்டேன்…

செல்லாக் காசாய் அவன் நெனப்ப
தலைய சுத்தி வீசிப்புட்டேன்..

பரதேசியவன் ஞாபகத்த
கால்தூசியென தட்டிவிட்டேன்.

அப்பன் ஆத்தா அன்பிருக்கு…
என் தலையெழுத்த
அழிச்செழுதும் தெம்பிருக்கு…

உசுருக்கு உசுரான நட்பிருக்கு
ஊர்வலத்தில் தேராகும் நெனப்பிருக்கு…

நெறஞ்ச மனசோட நன்றி சொல்ல
மாரியாத்தா கோயிலுக்குப் பொங்க வெப்பேன்
அவ கத்துத்தந்த பாடம் மட்டும்
சென்மத்துக்கும் தங்கவெப்பேன்..

உசரத்தோட உசரந்தாண்டி
ஊர்சனத்த சொக்கவெப்பேன்..
மச்சுமேல மச்சுகட்டி
ஊர்உலகம் மெச்ச வெப்பேன்..
 
உலகறியா பெண்களுக்கு
எங்கதைய சொல்லி வெப்பேன்

வெசனப்பட்டு ஒரு நொடியும் ஓயமாட்டேன்
வெவஸ்தகெட்டவன் நெனப்புல சாயமாட்டேன்

என் மனசுக்கும் அறிக்கும் ஏத்தபடி
எனக்குன்னு ஒரு மகராசன்
ஏரோப்பிளெனேறி
எங்கூட்டு மாடியில
எறங்கிடுவான்
அவன் மடிமேல தல வெச்சு நான்
உறங்கிடுவேன்…

கொஞ்சகாலம் போன பொறவு…
கலெக்டரா நா ஆன பொறவு…
கவுருமெண்டுக்கு கடிதம் போட்டு…
நாய் புடிக்கும் வண்டியில
இவனப்போல நாய்களையும்
சேத்திப் புடிக்கச் சொல்லி…
முடிஞ்சா நானே நேர்ல போயி
அந்த வேலைய நேர்த்தியா..
முடுச்சுருவேன்…


               “  சாமியோ பூதமோ இயற்கையோ விதியோ
                 ஏதோ ஒரு பெருஞ்சக்தி
                 மயிரிழையில் என்னைக் காத்ததென
                 இப்பத்தான் புரிஞ்சிச்சு….  “