Friday, November 4, 2011

நல்லதோர் வீணை

கோபிபாளையத்தில் பள்ளி விழா ஒன்றிற்கு அழைத்திருந்தார்கள்.  பெயரளவில் மட்டும் நான் அறிந்திருந்த கிராமம்.  என் ஊரிலிருந்து ஆறு ஏழு கி.மீ தொலைவில் தான் உள்ளது  என்றாலும் ஒருநாளும் அங்கு சென்றதில்லை. இந்த இலட்சணத்தில நான்  35 வயதை விழுங்கி விட்டேன் என்றெண்ணும் போது எனக்கே சிரிப்பு வரத்தான் செய்கிறது. கோபிபாளையம் என்ற பெயரைக் கேட்டவுடன் என் நினைவுக்கு வருபர் சாமி அண்ணன்.  கல்லூரியில் முதலாண்டு மாணவனாய் நான் மூத்த மாணவர்களின் “ரேகிங்”கிற்கு பயந்து பயந்து ஒதுங்கி இருந்த சமயம் இயல்பாய் வந்து பழகி அன்பாய் பேசி நட்பானவர். படிப்பில் இரண்டாண்டுகள் மூத்தவர் என்ற அலட்டலோ, பந்தாவோ இம்மியளாவும் அவரிடம் இருந்தது இல்லை.  கனிவான பேச்சும் , மென்மையான அணுகுமுறைகளும் சாமி அண்ணன் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி  இருந்தன. அவ்வப்போது படிப்பை பற்றி விசாரிப்பார். சில ஆலோசனைகள் சொல்வார்.  எதையும் எதிர்பார்த்து பழக மாட்டார்.  வகுப்பிலேயே சிறந்த படிப்பாளி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு முறை பதினைந்து இருபது புத்தகங்களைக் கட்டித் தூக்கியபடி கல்லூரிக்குள் நுழைந்தவரை “ என்னண்ணா  இத்தனை புத்தகங்கள்? ” எனக் கேட்க “ஆமாம் தம்பி, நூலத்திலிருந்து படிப்பதற்கு எடுத்திருந்தேன், திருப்பி கொடுக்கப் போறேன்” என்றார்  அதிர்ந்து போனேன். ஒரு மனுசன் இப்படியுமா படிப்பான் என்றெண்ணி வியந்தேன். அவருடைய ஊர்  கோபிபாளையம் ஆதலால் , எப்போது அந்தப் பேரைக் கேட்டாலும் அவர் நினைவு கட்டாயம் வரும். கல்லூரி முடித்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் வேகமாய் உருண்டோடிவிட்டன. சாமி அண்ணன் M.Tech முடித்து விட்டதாக எப்பவோ யாரோ சொல்லக் கேள்விப் பட்டிருந்தேன். இப்போது ஏதேனும் ஒரு   பன்னாட்டு நிறுவனத்தில் அமெரிக்காவிலோ , இலண்டனிலோ தான் கட்டாயம் அவர்  பணியில் இருப்பார். “சே ….எப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனிரின்  தொடர்பை புதுப்பிக்காமல் இருந்தது விட்டோமே…”என்றெண்ணிக்கொண்டேன்.
            வானம் கருக்கத் தொடங்கியது. பள்ளி விழா முடிந்து எல்லோரும் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.  விழாவுக்கு அழைத்திருந்த ஆசிரியர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிந்த என் கண்கள் அவர்களுக்குப் பின்னால் சுவரில் சாய்ந்து நின்ற பெரியவரின் மேல் எதேச்சையாய்ப் பட்டது. அவர் அணிந்திருந்த  கண் கண்ணாடியின் சட்டம் தான் என் கவனத்தை ஈர்த்தது. கரும்பழுப்பு நிறத்தில்,  வட்டமாய், சற்றே பெரியதாய் இருந்தக் கண்ணாடிச் சட்டத்தைப் பார்த்தவுடன் மனதிற்குள் இனம்புரியாத மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் உண்டானது. ஆம் . 15 ஆண்டுகளுக்கு முன் என் கல்லூரிப் பருவத்தில் இதே போன்ற கண்ணாடியை விரும்பி  அணிந்திருக்கிறேன். ஆச்சரியமாய் இருந்தது. அரைச் சட்டமும் , சட்டமில்லாத கண்ணாடிகளும் வந்து விட்ட இந்தக் காலத்தில் இன்னமும் அப்படிப் பட்ட கண்ணாடிச் சட்டங்கள் வருகின்றனவா? அதை விரும்பி அணிகின்றவர்களும் இருக்கின்றார்களா?  என் கவனம் ஆசிரியர்களுடனான உரையாடலிலிருந்து நழுவி அந்தப் பெரியவர் மேல் விழுந்தது . நன்றாக நரைத்த தலையில் முள்ளு முள்ளாய் நீட்டிக் கொண்டிருந்தன முடிக்கற்றைகள். இளைத்து ஒல்லியாயிருந்த உடலில் அவரின் ஆடைகள் அழுக்கேறி சற்று பொருத்தமில்லாமல் இருந்தன. யாரையும் பொருட்படுத்தாமல் ஆங்கில நாளிதல் ஒன்றை முகத்திற்கு அருகில் ஒட்டி வைத்து இலக்கில்லாமல் புரட்டிக் கொண்டிருந்தார். ஒரு  காகிதத்தில் அவ்வப்போது ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டார். அவ்வப்போது எங்கோ வெறித்துப் பார்த்தார். கவனத்தை குவிக்கும் பொருட்டு கண்களைச் சுருக்கும்  போதெல்லாம்  அவருடைய வாய்விளிம்புகள் இருபுறமும் மேல் நோக்கி நீண்டு பற்கள் துருத்திக் கொண்டு வெளியே  தெரிந்தது.   
மழைக் காற்று மண்வாசத்துடன் வீசியது. ஆழ்ந்து சுவாதித்துப் பரவசமானேன். கவனம் மீண்டு மீண்டும் ஆசிரியர்களுடன் பேச்சில் கலந்தேன். பேச்சு வாக்கில் சாமிஅண்ணா ஞாபகம் வரவே அவரைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன். பின்னால் நின்றிருந்த பெரியவரைச் சுட்டிக் காட்டி “ அதோ அங்க நிக்கறானே கையுல பேப்பர வெச்சுக்கிட்டு.. அவந்தான் சாமிநாது...இந்த ஊர்லயே மெத்தப் படிச்சவெ…இப்ப புத்தி பேதலிச்சு நடபொணமா வாழ்ந்துட்டு இருக்கா “ என்றார். பகீரென்றது. ஒருநிமிடம் உடல் முழுவதும் அதிர்ந்து அடங்கியது. கதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே இப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப் பட்டதுண்டு. யதார்த்தத்தில் அப்படியொரு நிகழ்வைச் சந்தித்தபோது உண்மையின் தகிப்பைப் தாங்க முடியவில்லை. விதியின் சதியை ஏற்கவும்முடியவில்லை புறந்தள்ளவும் முடியவில்லை. “எப்படி நடந்தது ? யார் அல்லது எது காரணம் ?”கேள்விகள் மனத்தைத் துளைத்தன. பதில்தேடி மனம் விரைந்தது. அந்த ஊர்ப் பெரியவர் ஒருவரிடமிருந்து பதில் கிடைத்தது.
சூறைக்காற்றுடன் மழை கனத்துப் பெய்ய ஆரம்பித்தது. “ அவங்கப்பனுக்கு ரெண்டு சம்சாரொ. எளய தாரத்துக்கு பொறந்தவந்தான் இந்தச் சாமிநாது…சின்ன வயசுல நொம்பத் குறும்புக்காரப் பயலா இருப்பா.. இல்லாத சேட்டயெல்லாம் பண்ணுவா.. அவங்கம்மாகாரி பெரியாஸ்பத்திரில நர்சா இருந்தா.. வேல வேலன்னு ஓடிட்டு இருந்தவளுக்கு பையன சரியா கவுனிக்க நேரமில்ல , இவெ சேட்ட பண்றப்போ எல்லாம் என்னமோ மாத்தரய கொடுத்துக் கொடுத்துத் தூங்க வெச்சுருவா..பைய பொட்டிப் பாம்பா அடங்கி ரெண்டு மூனு நாளைக்கு மந்திரிச்சு விட்டமாதிரி திரிவான்... அவங்கப்பன் எதையும் கண்டுக்கறதுல்ல.. எப்பெப்ப இவெ குறும்பு பண்ணுனாலும் , அடவாதம் பண்ணுனாலும் அவங்கம்மாகாரி மாத்தரைய மந்தரக் கோல் மாதர கையில எடுத்துக்குவா.. பைய மாத்தரன்னாலே பயந்து நடுங்குவான்…படிப்புல நொம்ப கெட்டிக்கார பய…தலையெல்லாம் மூள….இஸ்கூலுலயே பஸ்டா மார்க்கு வாங்குவான். வளர வளர பையனுக்கு வெவரந்தெரிய ஆரம்பிச்சுது..இனிமே எதுக்கெடுத்தாலு மாத்தர சாப்பிட மாட்டேன்னுட்டான். அன்னிலேந்து அவங்கப்பன் ஆத்தாளுக்கு புடுச்சுது கெரகொ. ஊட்டுக்குல்ல பொழுதுனிக்கு அவங்களோட எலியும் பூனையுமா சண்ட போடுவா…எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு பூட்டியா பண்ணுவான்…ஆனா வெளில எல்லார்கிட்டயும் தங்கமாட்ட பழகுவான்... நொம்ப சாதுவா நடந்துக்குவான்…எப்பப்பாரு தடிதடியா பொத்தகத்த வெச்சு படிச்சுக்கிட்டே இருப்பான் ஒரு வம்புதும்புக்கு போகமாட்டா…

இந்தூர்லயே மெட்ராசு காலேசு போயி படிச்ச மொத மகராச அவந்தா…எம்டெக்கொ கிம்டெக்கோ படிச்சான்னு சொல்லுவாங்க..நமக்கெங்க அந்த எளவெல்லாம் தெரியுது…அப்பொற…அவங்கோட காலேசுல படிச்ச புள்ள ஒருத்தியத்தா கண்ணாலங் கட்டிக்குவேன்ன்னு ஒத்தக் கால்ல நின்னா…அவங்கம்மாகாரிக்கு தன்னட பொறந்தவம்புள்ளய கட்டிவெச்சு சொத்துபத்த கைக்குல்லயே வெச்சுக்கோணும்னு நெனப்பு…பையன கெஞ்சிப் பாத்தா…வேல ஆகுல…சாணிப்பவுடர கலக்கி  ஊடு ஏகமும் தெளிச்சுட்டு போட்டு ., தான் குடிச்சுட்டதா நாடகம் ஆடி பையன கண்ணாலத்துக்கு சம்மதிக்க வெச்சா…கண்ணாலம் முடுஞ்சுது…பையனுக்கு பொஞ்சாதிக்கு ஒன்னும் ஒத்துவரல…அந்தப்புள்ள அவங்கப்பனூட்டுக்கு பொட்டிய கட்டிட்டா…அன்னிலேர்ந்து வெறி புடுச்சவ மாதர அவங்கப்பன் ஆத்தால எதுக்கெடுத்தாலும் திட்டித் தீப்பான்…கைய ஓங்கிட்டு அடிக்கப் போவா…

நாளுக்கு நாள் புத்திபேதலிச்சு அறுவாள எடுத்துட்டு அவங்கப்பனையும் ஆத்தாளயும் இந்த வீதியெல்லா தொரத்தியிருக்கான்…வெகுநாள் இப்படியே போச்சு…எல்லாக் கன்றாவியும் போயி கடைசில அவங்கப்பனும் ஆத்தாளும்  கண்ண மூடிட்டாங்க…நெறய சொத்து பத்து.. அவங்கப்பனோட மொதொ தாரப் பசங்கதான் அதயெல்லாம் பாத்துக்குறாங்க…இவனுக்கு வருசத்துக்கு இவ்வளவுன்னு வாத்தியார்கிட்ட குடுத்து பாத்துக்கறாங்க…இப்ப அவனுக்குன்னு யாரும் இல்ல…முழுப் பைத்தியம்னு ஆகல…ஆனா புத்தி சுகமில்ல…ஊருக்குள்ள யாரையும் எதுவும் பண்ணமாட்டா… அவம்பாட்டுகு போவா வருவா…சோறு போட்டா சாப்டுவா…அத்தாப் பெரிய வூட்டுல ஒத்தையா அனாதமாதர கெடக்கறான்…ஊருல அவனுக்கு நல்ல பேரு.. ஒரு காலத்துல அவனக் காட்டித் தான் எங்க புள்ளகளயெல்லாம் காலேசுக்கு படிக்க அனுப்புனோம்….சின்ன வயசு ஞாபகம் மட்டு அவனுக்கு நல்லா இருக்குது…ஊர்க்காரங்க ஊட்டுல எதாச்சும் நல்லது கெட்டதுன்னா அவன கூப்புடுவாங்க. அவனும் அல்லாரூட்டுக்கும் போவா. சோறு போடுவாங்க. சாப்புடுவா. வந்துருவா. அவனுக்கு சாப்பாடு போடறதயெ புண்ணியமா ஊர்க்காரங்க நினைக்கறாங்க…எல்லாருக்கு அவ மேல ஒரு கரிசன…அந்த ஆண்டவனுக்குதான் அவமேல கரிசன இல்லாம போச்சு…”

மழை ஓய்ந்திருந்தது. சப்தநாடியும் ஒடுங்கியவனாய் நின்றிருந்தேன். உதடுகள் துடித்துகொண்டிருந்தன…தூரத்தில் நின்றபடி இருந்த பெரியவரை இல்லை இல்லை சாமியண்ணாவைப் பார்த்தேன். இந்தப் பதினைந்தாண்டுகளில் சாமியண்ணனின் வாழ்க்கையை விதி எவ்வாரெல்லாம் கசக்கிப் பிழிந்துள்ளது…என மனம் வேதனையில் துடித்தது.  கல்லூரிக்காலத்திலேயே அவருக்கு இளநரை இருந்தது , கவனிப்பாரற்று இன்று தலை முழுக்க நரைத்திருக்கிறது. கரும்பழுப்பு நிறத்தில்,  வட்டமாய், சற்றே பெரியதாய் இருந்தக் கண்ணாடிச் சட்டத்தைத் தான் அவரும் கல்லூரிநாட்களில் அணிந்திருந்தார் என்பதும் நினைவுக்கு வந்தது. சற்றே தயக்கத்துடன் சாமியண்ணாவை நெருங்கினேன். என்னைப் பார்த்தார். அதே கனிவு நிறைந்த பார்வை. எந்தச் சலனமும் அவர் முகத்தில்லை. லேசாகச் சிரித்தபடி ” சாமிண்ணா ….என்னத் தெரிதுங்ளா”.      ”ம்… தெரிது”   - அந்தக்குரல்…என்னைச் சிலிர்க்க வைத்தது.“யாருன்னு சொல்லுங்க பாக்கலாம்”    “ம் ..தெரிது..ம் ஆனா தெரில….”

இரவு நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை… மனம் முழுக்க வேதனை அப்பிக்கிடந்தது.எப்படியோ தூங்கிப் போனேன். கனவில் யாரோஒருவர் பதினைந்து இருபது புத்தகங்களைக் கட்டித் தூக்கியபடி கல்லூரிக்குள் நுழைகிறார் “ என்னண்ணா  இத்தனை புத்தகங்கள்? ” என் கேட்க “ஆமாம் தம்பி, நூலத்திலிருந்து படிப்பதற்கு எடுத்திருந்தேன், திருப்பி கொடுக்கப் போறேன்” என்றார் …யாரோ ஒருவர் தன் பெரிய வீட்டின் வெற்று அறைகளில், யாருமற்ற தனிமையில் ஒரு காற்றைப் போல் அவன் இங்குமங்கும் உலவிக் கொண்டு இருக்கிறார். அவர் அருகில் கிடந்த கண்கண்ணாடி கரும்பழுப்பு நிறத்தில், வட்டமாய், சற்றே பெரிய கண்ணாடிச் சட்டத்தை அணிந்திருந்தது.

Monday, September 12, 2011

குறளின் குரல் : புதுக்கவிதை வடிவில் திருக்குறள்

.                                                                                                                                                                                        .

புலனடக்கம்
.                                                                                                                                                                                        .
புலன்ஐந்து பூட்டிய தேரினிலே
வலம்வந்து வாழ்கிறோம் இப்பாரினிலே.
நலமாய் வாழ்ந்து மகிழ்ந்திடவே
நாட்கள் பயனுறக் கழிந்திடவே
நல்வழியினில் பழக்கிடுவோம் ஐம்புலனை
வந்தவழியினில் விரட்டிடுவோம் கொடும்யமனை
 
.                                                                                                                                                                                        .

அறம்
.                                                                                                                                                                                        .
இறந்தாலும் இறவாத துணையுண்டு
அறமென்று அதற்குப் பெயருண்டு
வெள்ளை நிறத்தில் மனங்கொண்டு
பொறாமை ஆசை சினம் வென்று
வாழ்ந்தால் வாழ்வே கற்கண்டு

கற்றவை மறப்பினும் கற்றிடலாம்
பெற்றவை இழப்பினும் பெற்றிடலாம்
கண்ணாடி சிதறினும் ஒட்டிடலாம்
ஒழுக்கத்தில் வழுக்கி வீழ்ந்திடிலே
கலக்கமே வாழ்க்கை ஆகிடுமே
கண்ணீரில் உயிர்கள் மூழ்கிடுமே..
 .                                                                                                                                                                                        .

அழுக்காறாமை
.                                                                                                                                                                                        .
பெற்றவை கொண்டு மகிழ்ந்திடவே
கற்றிட வேண்டும் வாழ்வினிலே
மற்றவர் பெற்றவை தமைக்கண்டு
மனதில் பொறாமை மிகக்கொண்டு
வெந்துஉயிர் சிந்துவதில் பயனென்ன?
 .                                                                                                                                                                                        .

தீவினையச்சம்
.                                                                                                                                                                                        .
மனதிற்குள் தீங்கொன்று நினைத்தாலும்
வரவிற்குள் சேர்ந்துவிடும் நம்கணக்கில்
நிழலைப் போல் நீங்காமல் தொடர்ந்திடுமே
தீயைப்போல் உயிர்எரித்துச் சென்றிடுமே.

நன்மைகள் மட்டுமே நாம் நினைப்போம்.
உண்மைகள் மட்டுமே நாம் விதைப்போம்.
 .                                                                                                                                                                                        .

வாய்மை
.                                                                                                                                                                                        .
 எவ்வுயிர்க்கும் தீமைதரா சொற்களையே
எந்நாளும் பேசியே பழகிடுவோம்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகிடுவோம்.
உண்மைகள் மட்டுமே பேசிப்பேசி
உள்ளங்களை எல்லாம் வென்றிடுவோம்.
 .                                                                                                                                                                                        .

குடிமை (உயர்ந்தவர்கள்)
.                                                                                                                                                                                        .
பழிக்கு நாணுதல் ஒன்றே
வழித்துணை ஆகிடும் நன்றே.
ஏழைக்கு ஈந்திடுவோம் இன்றே
தாழையென மணந்திடுவோம் நன்றே.

கொடுப்பதற்கு இல்லை எனும்போதும்
இன்சொல்லால் வாழ்த்துக்கள் கொடுப்போம்.
அன்பால் அகிலத்தை அளப்போம்.

தாய்மையென வாய்மையதை மதிப்போம்
தூய்மையான மனமே கடவுள் – அதைத் துதிப்போம்

வறுமை தாலாட்டும் வேளையிலும்
வஞ்சனைப் பேயோட்டி வாழ்ந்திடிலே
கூற்றுவனும் வாலாட்டி வந்திடுவான்
தோற்றுப்போய் வந்தவழி சென்றிடுவான்

எட்டடுக்கு மாளிகையில் வாழும்போதும்
ஏழையெனக் குடிசையில் வீழும்போதும்
மனிதரைச் சமமாய்ப் பார்த்திடிலே
மானுடம் பதமாய்ப் பூத்திடுமே
.                                                                                                                                                                                        .

மானம்
.                                                                                                                                                                                        .
மானம் வழுவிய செயல்தனுக்கே
தானமெனப் பூவுலகைத் தந்திடினும்
பழுத்த நெருப்பை மிதித்தது போல்
பதறித் துடித்துத் தாவிடுவோம்
மானமே உயிரெனக் கூவிடுவோம்

மாளாத செல்வங்கள் வாய்த்திடினும்
பணிவெனும் பேழையில் சேர்த்திடுவோம்
தாளாத வறுமை சாய்த்திடினும்
தளராது தன்மானம் காத்திடுவோம்.

குன்றுநுனி விளக்கொளியாய் உலகமெலாம்
சென்றுநனி புகழ்பரப்பி நின்றாலும்
குன்றிமணி அளவிலொரு பழிசெய்யின்
குன்றிவிடும் புகழொடு மானம்
பின்னர் வாழ்ந்தென்ன லாபம்?
 .                                                                                                                                                                                        .

சிற்றினம் சேராமை
.                                                                                                                                                                                        .
தூரிகையில் பட்டதண்ணீர் ஓவியமாகும்
சேற்றினிலே பட்டசந்தனமும் சேறேயாகும்.
பெரியோர்தம் நட்பினிலே விதியே மாறும்
சிறியோர்தம் நட்பினிலே மதியே மாயும்.
மனமும் செயலும் தூய்மை பெறும்
மேன்மக்கள் நட்பினிலே
மனமும் மதியும் நோய்மை பெறும்
கீழ்மக்கள் நட்பினிலே.
காற்றில் கரைத்த சுகந்தமென
வாழ்வே மணக்கும் மேலோர் நட்பில்
சேற்றில் இரைத்த மல்லிகையாய்
வாழ்வே பிணக்கும் கீழோர் நட்பில்
 .                                                                                                                                                                                        .

பெருமை
.                                                                                                                                                                                        .
வீறிட்டு அழுது இந்த பூமிதொடுவதும்
நோய்பட்டுச் சிதைந்து உயிர்விடுவதும்
ஞாலத்தில் எல்லொர்க்கும் ஒன்றே- இதை
ஞாபகத்தில் கொள்வோம் நன்றே.
இடையில் வாழும் வாழ்க்கைதனில்
வந்துதித்த மாற்றம் யாவும்
அவரவர் முயற்சியும் பயிற்சியுமேயன்றோ!
சிகரத்தில் இருந்தாலும் உள்ளம்
சீரிழந்து கிடக்கும் என்றால்
தகரத்தை ஒப்புவர் தானே !
குடிசைக்குள் இருந்தாலும் உள்ளம்
சீர்மிகுந்து செழிக்கு தென்றால்
தங்கத்தை ஒப்புவர் தானே !
 .                                                                                                                                                                                        .

வினைத்தூய்மை
.                                                                                                                                                                                        .
வானமது இடிந்துவிட்ட போதினிலும்
தான் இடிந்து வீழாத திட்பமது
வினைத் தூய்மை உள்ளவர்க்கே கிட்டும்

சொந்த உடல் வெந்து உயிர்
சிந்தி விடும் வேளையிலும்
நொந்தபழி பாவமதைச் செய்திடோம்!
வந்த வழி முந்தி விடும்
பொன் பொருள் செல்வமெல்லாம்
என்ற மொழி நாம் அறிந்து
நேர்வழியில் சேர்த்திடுவோம் செல்வமெலாம்!
 .                                                                                                                                                                                        .

பண்புடைமை
.                                                                                                                                                                                        .
மலர்முகமும், குருநகையும்,
நெகிழ்மனமும், மகிழ் அன்பும்,
நெஞ்சினில் உண்மையும், பேச்சினில் மென்மையும்,
கொண்டு வாழுவோம் பண்புடனே! - உலகை
வென்று வாழுவோம் மாண்புடனே!.