Monday, September 12, 2011

மொழி காத்திடுவோம் :


உலகத்திருக்குறள் பேரவை – 38வது ஆண்டு விழா
.       மொழி காத்திடு - கவியரங்கம் – சிவமுருகன் (07-08-2011) 

விலங்குகளோடு விலங்குகளாய்
விளங்கிய மனிதர்குலம்
விழிபெற்றதும் வாழும் வழிகற்றதும்
மொழிஎனும் ஒளியால் அன்றோ?

அச்சமே ஆடையாய்
இலட்சம் ஆண்டுகள்
அலைந்து திரிந்த மானுடரின் ஆளுமை
விளைந்து செறிந்தது மொழியால் அன்றோ?

மிருகமனத்தின் பதிவுகளை
படிப்படியாய் பொடிப்பொடியாக்கி
மனிதனுக்கு மனிதனை அறிமுகம்
செய்தது மொழியே அன்றோ?

காட்டாற்று வெள்ளமாய்
திக்கற்றுத் திரிந்த மனிதகுலம்
பண்பாட்டின் பாதையில்
பாதம் பதித்தது மொழியால் அன்றோ?

வெள்ளமென உள்ளூரும்
உள்ளத்து உணர்வுகளை
தெள்ளெனவே உள்ளபடி
உலகுக்குச் சொல்லிடவும்,
உள்ளுவதென்ன மற்றவர்கள்
உண்மையதை உணர்ந்திடவும்
ஏற்றதோர் கருவி மொழியேயன்றோ?

மந்திரத்தில் காய்த்ததல்ல
வானம் கிழித்து குதித்ததல்ல மொழி!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
பரிமாணத்தின் படிநிலைகள் பலகடந்து
துளிர்த்துச் செழித்தது மொழி!
 
பல்லாயிரம் தலைமுறைகள்
பாங்காய் சேமித்துவைத்த
பட்டறிவின், தன்னறிவின்
சேமிப்புக் கிடங்கு மொழி!

மனிதகுலத்திற்கு
பண்பாட்டைச் சொல்லிக்கொடுத்ததும்
நாகரிகத்தை அள்ளிக்கொடுத்ததும்
மொழியே அன்றொ?
 
மனிதகுலத்தின்
அறியாமையை கிள்ளிப்பறித்ததும்
மூடமையை தள்ளித்தவிர்த்ததும்
மொழியே அன்றோ?

மொழியின் வாழ்வே இனத்தின் வாழ்வு
மொழியது வீழ்ந்தால் இருளே வாழ்வு
இவ்வுண்மைகள் யாவும் அறிவோம்
மொழியே விழியென மொழிவொம்.
 
செல்வத்துள் பெருஞ்செல்வம்
மொழிஎன்னும் அருஞ்செல்வம்
சேர்த்துத்தான் வைத்தோமே!
இவ்வையத்துள் வாழும்மட்டும்
மொழிஉணர்வால் வேலிகட்டிஅதை
செம்மையுறக் காப்போமே!                            

1 comment: