Monday, September 12, 2011

பூக்களால் தொடுத்த பாக்கள் : மழலைப் பாடல்



சிவந்து சிரிக்குது ரோசாப்பூ!
முள்கிரீடம் தரித்த ரசாப்பூ!

சந்தனம் சிந்திடும் செண்பகப்பூ!
சிந்தையில் தந்திடும் புன்சிரிப்பு!

வெண்மையின் புன்னகை மல்லிகைப்பூ!
உண்மையின் பொன்னகை மல்லிகைப்பூ!

மஞ்சளில் துஞ்சிடும் சாமந்திப்பூ
நெஞ்சினில் கொஞ்சிடும் நல்வனப்பு!

ஊதா ஊறிடும் ஊதாப்பூ!
பாடம் எதுவும் ஓதாப்பூ!

நீலத்தில் உறவாடும் சங்குப்பூ!
நீலக்கடல் பிறவாத  சங்கு பூ!

சுகந்தம் அள்ளும் சாதிமல்லி!
சுகமாய்க் கொல்லும் உயிரைக்கிள்ளி!

குட்டித் தேனிக்கொரு கணினி கீதம்: மழலைப் பாடல்



கணினியை அழகாய்க் கற்றுக்கொள்!
        இத்தரணியில் ராணிநீ ஒத்துகொள்!
கணினியில் கலைபல கற்றுக்கொள்!
        கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள்!

கணினியின் தோள்களில் தொற்றிக்கொள்!
        நொடியினில் உலகினை வெற்றிகொள்!
கணினியின் நுட்பங்கள் கற்றுக்கொள்!
        காலடியினில் உலகம் பெற்றுக்கொள்!

இணையத்தில் இணைந்திடு கண்மணி!
        இதை இதயத்தில் பொதிந்திடு பொன்மணி!
உலகத்தின் இதயமது கண்மணி!
        உலகோடு பழகிடு பொன்மணி!
விரிஅறிவின் உதயமது மின்மினி!
        கணிப்பொறியின் பயணமது கண்மணி!

ஏழாம் அறிவிது கண்மனி!
       அதை அறிவதுன் கடமை பொன்மணி!
புத்திக்கு மிட்டாய் இது கண்மனி!
       எத்திக்கும் சிட்டாய் நீபயணி!

குட்டிப் பாப்பாவுக்கொரு தேசியகீதம்: மழலைப் பாடல்

 
தமிழ் என்பதொரு மொழியம்மா!
இத்தரணியின் முதல் ஒளியம்மா!
தமிழ் ஒரு ஆன்ற வெளியம்மா!                   
மொழி பல ஈன்ற மொழியம்மா!

தொன்மைப் பசுமைக் கிளியம்மா!
அதைத் தோளில் ஏற்றிக் களியம்மா!
பொங்கு தமிழொரு ஆழியம்மா!                   
தங்கமே உனக்கொரு தோழியம்மா!

எண்ணம் பிறக்கும் வழியம்மா!
திண்ணம் கொடுக்கும் மொழியம்மா!               
நம் சிந்தை செதுக்கும் உளியம்மா!
உன் தந்தை தாயென மொழிஅம்மா!

கற்பனை வளர்க்கும் வழியம்மா!
சொற்சுளை தளிர்க்கும் வெளியம்மா!
அறிவு செழிக்கும் வழியம்மா!
ஆற்றல் கொழிக்கும் மொழியம்மா!

சுவாசம் நிகழ்த்தும் வளியம்மா!
நேசம் முகிழ்க்கும் வழியம்மா!
அறியாமை குடிக்கும் ஒளியம்மா!
மூடமை வடிக்கும் வழியம்மா!                                                  

உண்மை இதுவே தெளியம்மா!
தமிழ் தமிழெனப் பொழியம்மா!
தமிழ்நம் உயிரென மொழியம்மா!
இத்தரணியில் பயிரெனெச் செழியம்மா!

மொழி காத்திடுவோம் :


உலகத்திருக்குறள் பேரவை – 38வது ஆண்டு விழா
.       மொழி காத்திடு - கவியரங்கம் – சிவமுருகன் (07-08-2011) 

விலங்குகளோடு விலங்குகளாய்
விளங்கிய மனிதர்குலம்
விழிபெற்றதும் வாழும் வழிகற்றதும்
மொழிஎனும் ஒளியால் அன்றோ?

அச்சமே ஆடையாய்
இலட்சம் ஆண்டுகள்
அலைந்து திரிந்த மானுடரின் ஆளுமை
விளைந்து செறிந்தது மொழியால் அன்றோ?

மிருகமனத்தின் பதிவுகளை
படிப்படியாய் பொடிப்பொடியாக்கி
மனிதனுக்கு மனிதனை அறிமுகம்
செய்தது மொழியே அன்றோ?

காட்டாற்று வெள்ளமாய்
திக்கற்றுத் திரிந்த மனிதகுலம்
பண்பாட்டின் பாதையில்
பாதம் பதித்தது மொழியால் அன்றோ?

வெள்ளமென உள்ளூரும்
உள்ளத்து உணர்வுகளை
தெள்ளெனவே உள்ளபடி
உலகுக்குச் சொல்லிடவும்,
உள்ளுவதென்ன மற்றவர்கள்
உண்மையதை உணர்ந்திடவும்
ஏற்றதோர் கருவி மொழியேயன்றோ?

மந்திரத்தில் காய்த்ததல்ல
வானம் கிழித்து குதித்ததல்ல மொழி!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
பரிமாணத்தின் படிநிலைகள் பலகடந்து
துளிர்த்துச் செழித்தது மொழி!
 
பல்லாயிரம் தலைமுறைகள்
பாங்காய் சேமித்துவைத்த
பட்டறிவின், தன்னறிவின்
சேமிப்புக் கிடங்கு மொழி!

மனிதகுலத்திற்கு
பண்பாட்டைச் சொல்லிக்கொடுத்ததும்
நாகரிகத்தை அள்ளிக்கொடுத்ததும்
மொழியே அன்றொ?
 
மனிதகுலத்தின்
அறியாமையை கிள்ளிப்பறித்ததும்
மூடமையை தள்ளித்தவிர்த்ததும்
மொழியே அன்றோ?

மொழியின் வாழ்வே இனத்தின் வாழ்வு
மொழியது வீழ்ந்தால் இருளே வாழ்வு
இவ்வுண்மைகள் யாவும் அறிவோம்
மொழியே விழியென மொழிவொம்.
 
செல்வத்துள் பெருஞ்செல்வம்
மொழிஎன்னும் அருஞ்செல்வம்
சேர்த்துத்தான் வைத்தோமே!
இவ்வையத்துள் வாழும்மட்டும்
மொழிஉணர்வால் வேலிகட்டிஅதை
செம்மையுறக் காப்போமே!